

தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள மருதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சமுத்திரக்கனி. இவரது மகன் திருமலைகுமார் (17). சமுத்திரக்கனி குடும்பத்துக்கும், அவரது சகோதரர் அருமைக்கனி குடும்பத்துக்கும் சொத்துப் பிரச்சினை இருந்துள்ளது.
2014 டிச. 31-ம் தேதி திருமலைகுமார் வீட்டுக்குச் சென்றஅருமைக்கனி, அவரது மனைவி ராஜாத்தி, மகன் காமராஜ் ஆகியோர், தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த திருமலைகுமார் உயிரிழந்தார். இது தொடர்பாக அருமைக்கனி, ராஜாத்தி, காமராஜ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, குற்றம் சுமத்தப்பட்ட காமராஜ், அருமைக்கனி, ராஜாத்தி ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.