

சென்னை: குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னைஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் பிரசன்ன விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவர், திருவான்மியூர் திருவீதியம்மன் கோயில் தெருவில் கட்டி வந்த வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெற கடந்த 2015-ம் ஆண்டு குடிநீர்வழங்கல் வாரிய தலைமை அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதன்படி சங்கரின் வீட்டுக்கு ஆய்வுக்கு சென்ற இளநிலைப் பொறியாளர் அருமை செல்வி (55) குடிநீர்இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம்லஞ்சம் கேட்டதாக சங்கர் லஞ்ச ஒழிப்புபோலீஸாரிடம் புகார் அளித்தார்.
பின்னர் போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.15ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.அதை அருமைசெல்வி வாங்கியபோது போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். அதையடுத்து அருமைசெல்வி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஊழல் தடுப்பு வழக்கு நீதிமன்றம்: இந்த வழக்கு சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.மணிமேகலை முன்பாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கே.உஷாராணி ஆஜராகி வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அரசு அதிகாரியான அருமை செல்விக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனைமற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம்விதித்து தீர்ப்பளித்துள்ளார்.