சென்னை | போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலம் மோசடி: தாய் - மகன் உட்பட 4 பேர் கைது

தியாகராஜன், ஹேமலதா, ராஜசேகர், சேகர்
தியாகராஜன், ஹேமலதா, ராஜசேகர், சேகர்
Updated on
1 min read

சென்னை: போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் தாய், மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கந்தன்சாவடியைச் சேர்ந்தவர் ஏ.எல்.சிதம்பரம். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், தனக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் (45), பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஹேமலதா (55), அவரது மகன் ராஜசேகர் (31), கல்பாக்கம் சேகர் (55) ஆகிய 4 பேரும் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து விட்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி விசாரணை பிரிவு காவல் ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புகாருக்குள்ளான 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in