

வேலூர்: காட்பாடி அருகே மணல் கடத் தலை செல்போனில் வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரரை தாக்கியதாக ஒருவர் கைதான நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை காவல் துறை யினர் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த எருக்கம்பட்டு பகுதியில் உள்ள பொன்னையாற்றில் அதே பகுதியைச் சேர்ந்த சகோ தரர்கள் முனுசாமி, குமரேசன் (40) ஆகியோர் நேற்று அதிகாலை டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதை அந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் உமாபதி (40) என்பவர் தனது கைபேசியில் வீடியோவாக எடுத்துள்ளார். இதைப்பார்த்த முனுசாமி, குமரேசன் ஆகியோர் உமாபதி வைத்திருந்த கைபேசியை பறித் ததுடன், இரும்பு கம்பியால் அவரை தாக்கியுள்ளனர். இதில், உமாபதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, முனுசாமி மற்றும் குமரேசன் ஆகியோர் அங்கிருந்த தப்பினர். படுகாயம் அடைந்த உமாபதி, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் வழக்கு... இந்த தகவலறிந்த மேல்பாடி காவல் துறையினர் விரைந்து சென்று விசாரித்ததுடன், உமாபதியை தாக்கியதாக குமரேசனை கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய் தனர். தலைமறைவாக உள்ள முனுசாமியை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, காவல் துறையினர் கூறும்போது, ‘‘தாக்குதலில் படு காயம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர் உமாபதியும், முனுசாமி மற்றும் குமரேசன் ஆகியோர் உறவினர்கள். இவர்களுக்குள் 20 சென்ட் நிலம் தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இது தொடர்பான முன்விரோதம் இரு தரப்பினரிடையே இருந்து வருகிறது. முனுசாமியும், கும ரேசனும் விவசாயத்துக்கு பயன்படுத்தும் டிராக்டர் மூலம் அவ்வப்போது பொன்னையாற்றில் இருந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர். வழக்கம்போல் இன்று (நேற்று) அதிகாலை மணல் கடத்தலில் ஈடுபட்டபோது, அதை கைபேசியில் வீடியோ எடுத்து காவல் துறையினரிடம் அளிக்க உமாபதி முயன்றபோது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முனுசாமியை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது’’ என்றனர்.