தூத்துக்குடியில் திருமணம் செய்த 3-வது நாளில் காதல் தம்பதி கொலை: போலீஸார் தீவிர விசாரணை

கொலை செய்யப்பட்ட மாரிசெல்வம், கார்த்திகா.
கொலை செய்யப்பட்ட மாரிசெல்வம், கார்த்திகா.
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த 3-வது நாளில் புதுமணத் தம்பதி கொலை செய்யப்பட்டனர். 3 தனிப்படைகள் அமைத்து, கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தூத்துக்குடி முருகேசன் நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிசெல்வம்(24). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வந்தார்.

இந்நிலையில், மாரிசெல்வமும், தூத்துக்குடி திருவிக நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கார்த்திகா பட்டப் படிப்பு முடித்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது காதலுக்கு கார்த்திகா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையடுத்து, கடந்த 30-ம் தேதி கார்த்திகாவை அழைத்துக் கொண்டு கோவில்பட்டிக்கு சென்ற மாரிசெல்வம், கிழக்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். பின்னர், கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கோவில்பட்டியிலேயே தங்கி இருந்தனர்.

திருமணமாகி 3 நாட்களுக்குப் பிறகு நேற்று காலையில் காதல் தம்பதி தூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ள மாரிசெல்வத்தின் வீட்டுக்கு வந்துள்ளனர். நேற்று மாலை 6 மணி அளவில் மாரிசெல்வத்தின் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர். புதுமணத் தம்பதியர் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

அப்போது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து, மாரிசெல்வம், கார்த்திகா ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜிசரவணன், ஏடிஎஸ்பி கார்த்திகேயன், ஊரக டிஎஸ்பி சுரேஷ், சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, மாரிசெல்வம், கார்த்திகா ஆகியோரது உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

புதுமண தம்பதியைக் கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக எஸ்.பி. பாலாஜி சரவணன் கூறும்போது, ‘‘கொலையாளிகளைக் கைது செய்வதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட 3 நாட்களில் புதுமணத்தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in