Published : 03 Nov 2023 06:10 AM
Last Updated : 03 Nov 2023 06:10 AM
பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த நாகல்கேணி, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேகஷாம்(33). இவரது மனைவிதாரணி (30). இருவரும் மருத்துவர்கள். இத்தம்பதி நேற்று பணி முடிந்ததும் தங்களது காரில் பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது இவர்களது காருக்கு பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று இவர்களது காரின் மீது உரசிவிட்டு விரைந்துசென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த டாக்டர் மேகஷாம் காரில் விரைந்து சென்று, அந்த லாரியைமடக்கிப் பிடித்து அதன் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர், டாக்டர் மேகஷாமை அவரது மனைவி தாரணி கண்ணெதிரே சரமாரியாக தாக்க தொடங்கினார். இதை வீடியோ எடுத்த பொதுமக்களையும் அந்த லாரி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து ஆபாசமாகத் திட்டினர்.
இச்சம்பவம் குறித்து பல்லாவரம் போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதற்குள் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றார். லாரி ஓட்டுநருடன் சேர்ந்து டாக்டரை தாக்கிய அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் குரோம்பேட்டை, கணபதிபுரம், நாகாத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநரான சந்துரு (36) என்பதும், தப்பியோடிய லாரி ஓட்டுநர் அதே பகுதியைச்சேர்ந்த சதீஷ் (35) என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சந்துரு மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். டாக்டர் மேகஷாமை, லாரி ஓட்டுநர் தாக்கும் வீடியோசமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT