

கோவை: தனியார் நிறுவன நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட நூற்றுக் கணக்கானோர் கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் நேற்று புகார் அளிக்க திரண்டனர்.
கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன்ஸ் (யுடிஎஸ்) என்ற தனியார் நிறுவனம், அதிக லாபம் மற்றும் வட்டி தருவதாக விளம்பரம் செய்து தமிழகம் முழுவதும் சுமார் 76 ஆயிரம் பேரிடம் பணம் திரட்டி யது. ஆனால் அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் ரூ.1016 கோடி வரை மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நிறுவனத்தின் நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வசதியாக, பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறை சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகேயுள்ள முன்னாள் படை வீரர் நல (ஜவான்ஸ் பவன்) வளாகத்தில் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்று புகார் அளித்தனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் போது,‘‘பல ஆண்டுகள் உழைத்து சம்பாதித்து சேமித்து வைத்த பணத்தை இழந்துள்ளோம். மோசடி செய்த பணத்தில் ஏராளமான சொத்துகளை அந்நிறுவனத்தினர் வாங்கியுள்ளனர். அவற்றை பறிமுதல் செய்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தொகை திரும்ப கிடைக்கும்’’என்றனர். இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.