

உடுமலை: உடுமலை அருகே தளி, அமராவதி நகர் காவல் நிலையங்கள் இரவில் பூட்டப்பட்டு, காலையில் மட்டுமே திறக்கப்படும் வழக்கத்தை கைவிட்டு 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலையில் இருந்து திரு மூர்த்தி அணை செல்லும் வழியில் தளி காவல் நிலையம் உள்ளது. தளி பேரூராட்சி, திருமூர்த்தி மலை நகர், மலைக் கிராமங்கள், மொடக்குப்பட்டி, வாளவாடி, எரிசனம்பட்டி, தீபாலபட்டி, தேவனூர் புதூர், செல்லப்பம் பாளையம், உடுக்கம் பாளையம் உள்ளிட்ட உடுமலையின் மேற்கு பகுதி கிராமங்கள் முழுவதுக்குமான சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணிகள் தளி காவல் நிலையம் மூலம் மேற்கொள்ளப் படுகின்றன.
அதே போல அமராவதி அணைக்கு செல்லும் வழியில் உள்ள அமராவதி காவல் நிலையத்தில், சைனிக் பள்ளி, தளிஞ்சி, கோடந்தூர் உள்ளிட்ட மலைக் கிராமங்கள், கல்லாபுரம், ஆண்டிய கவுண்டனூர், பெரும் பள்ளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் நக்சல் நடமாட்டம் இருப்பதாகவும், இதனால் இவ்விரு காவல் நிலையங்களுக்கும் ஆபத்து நேரும் வாய்ப்புள்ளதாகவும் கூறி காவல் நிலையங்கள் இரவில் பூட்டப்பட்டு, காலையில் திறக்கும் நடைமுறை உள்ளது. இரவு நேரங்களில் ஒரு காவலர் மட்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் நடைமுறையும் உள்ளது. இவ்விரு காவல் நிலையங்களையும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது,‘‘மேற்கு தொடர்ச்சி மலைகளில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக போலீஸார் கூறி வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் நக்சல் பிரிவை சார்ந்த யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை. அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இரவில் காவல் நிலையத்தை பூட்டிச் செல்வது ஏற்புடையதல்ல.
நள்ளிரவில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், உடனடியாக மக்கள் காவல் நிலையத்தை அணுகும் வகையில் தளி, அமராவதி காவல் நிலையங்களை 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து காவல் உயர் அதிகாரிகள் கூறும் போது, ‘‘நக்சல் நடமாட்டத்தால் இரவு நேரங்களில் தளி, அமராவதி காவல் நிலையங்களை இரவில் பூட்டி, காலையில் திறக்கும் நடைமுறை பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை நக்சல் பிரிவை சேர்ந்தவர்களால், தளி, அமராவதி காவல் நிலையங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக பதிவுகள் இல்லை. அரசு உத்தரவிட்டால், இவ்விரு காவல் நிலையங்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.