

சென்னை: திருவான்மியூரைச் சேர்ந்த பெயின்டரை கொலை செய்த நபர், காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். சென்னை நீலாங்கரை அறிஞர் அண்ணாநகர் 7-வது தெருவை சேர்ந்தவர் கமால் (47). இவர், ரத்த கறைப்படிந்த ஆடையுடன் திருவான்மியூர் காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். அங்கு அவர் சொன்ன தகவலை கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை திருவான்மியூர் பி.டி.கே.நகரை சேர்ந்த பெயின்டர் செந்தில்குமார் (51) என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக அப்போது அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, "நான் தீவிர சிவ பக்தர். நான் திருவான்மியூர் திருமுடி விநாயகர் கோயில் தெருவில் உள்ள மூக்குபொடி சித்தர் கோயிலுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது செந்தில்குமார் என்னை கேலி-கிண்டல் செய்து வந்தார். இதுபற்றி சிவனிடம் நான் முறையிட்டேன். சிவன் சொன்னப்படி செந்தில்குமாரின் கதையை முடித்துவிட்டேன்" என்று கூறினார்.
கமால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று இருந்ததால் அவர் சொல்வது உண்மையா, பொய்யா என்பது பற்றி போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர் சொன்ன இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கு செந்தில்குமார் ரத்தம் சிந்திய நிலையில் சடலமாகக் கிடந்தார். அவரது உடலை போலீஸார் கைப்பற்றி பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனையில் செந்தில்குமார் உடலில் 18 இடங்களில் கத்திகுத்து காயங்கள் இருப்பது தெரியவந்தது. செந்தில்குமாரை கொலை செய்த கமால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்திருந்ததும், கரோனா காலகட்டத்தில் இவர் தொழிலில் நஷ்டத்தை சந்தித்துள்ளதும் தெரியவந்தது. இதனால் மனதளவில் கமால் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இவர் நெற்றி முழுவதும் திருநீறை பூசிக் கொண்டு மூக்குபொடி சித்தர் கோயிலே கதி என்று இருந்து வந்துள்ளார். கமாலின் தோற்றத்தை பார்த்து செந்தில்குமார் கேலி- கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை கொலை செய்துள்ளார். விசாரணைக்கு பின்னர்கமால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.