Published : 31 Oct 2023 06:16 AM
Last Updated : 31 Oct 2023 06:16 AM
குடியாத்தம்: குடியாத்தத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படை உதவி ஆய்வாளர் குணசேகரன் என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன் (58). மத்திய ரிசர்வ் காவல் படையில் (சி.ஆர்.பி.எப்) உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் 19-வது படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் நேற்று முன்தினம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தீபாவளிக்கு விடுமுறை அளிக்காதது மற்றும் தொடர்ந்து 36 மணி நேரம் பணியில் இருந்த மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் இருந்து அவரது உடல் பாதுகாப்புடன் விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து தனி வாகனத்தில் குடியாத்தத்தில் உள்ள அவரது உறவினர்கள் வசம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சிஆர்பிஎப் வீரர்களின் மரியாதையுடன் குணசேகரனின் உடல் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறந்த குணசேகரனுக்கு வசந்தா என்ற மனைவி உள்ளார். மகள் சுஷ்மா வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மகன் ஜஸ்வந்த் பொறியாளராக உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT