

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம், பொருளை பெற்றுக் கொண்டு தன்னை மோசடி செய்து விட்டதாக உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் விக்ரமன் மீது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் 13-க்கும் மேற்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், லண்டனில் ஆய்வுப் பட்டம் மேற்கொண்டு வருபவரான பெருங்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இணை செய்தி தொடர்பாளரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான விக்ரமனுடன் (35) சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியது. இந்நிலையில், அவர் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி படிப்படியாக ரூ.13 லட்சம் வரை பெற்றுக் கொண்டார். மேலும், அவருக்கு உயர்ரக லேப்டாப், செல்போன்கள்கூட வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அனைத்தையும் பெற்றுக் கொண்ட அவர் பின்னர் என்னை கொஞ்சம் கொஞ்சமாக நிராகரித்தார். திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றவும் செய்தார்.
இதுகுறித்து கேட்டபோது சாதி பெயரை கூறி திட்டினார். எனவே, பணம், பொருட்களை பெற்றுக்கொண்டு, பழகிய பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி மேலும் மோசடி செய்த விக்ரமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார். முன்னதாக இதேபோன்று விசிக தலைமை அலுவலகத்துக்கும் அப்பெண் கடிதம் எழுதினார். ஆனால், விக்ரமன் மீது கட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததையடுத்தே அப்பெண் காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், அப்பெண்ணுடன் நட்புடன்தான் பழகினேன் என்றும், யாரையும் ஏமாற்றவில்லை என்றும் விக்ரமனும் விளக்கம் அளித்திருந்தார். போலீஸார் விக்ரமன் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பெண் நீதிமன்றம் சென்றார். உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தற்போது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விக்ரமன் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 13-க்கும் மேற்பட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் ஜாமீனில் வெளியே வரமுடியாத சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். இதனால், அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.