

ஈரோடு: ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 பவுன் நகையை கொள்ளையடித்து தலைமறைவான நபர்களை கோபி போலீஸார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள மொடச்சூரைச் சேர்ந்தவர் அர்ச்சுனன் (61). ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். நேற்று முன்தினம் மாலை அர்ச்சுனனும், அவரது மனைவி சபிதாவும் அந்தியூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். அவரது மகள் மருத்துவர் தீபிகா மருத்துவ மனைக்கு சென்றுள்ளார்.
அர்ச்சுனனும், சபிதாவும் இரவு வீடு திரும்பியபோது, சமையல் அறையில் உள்ள கதவு உடைக்கப்பட்டிருந்தது. பொருட்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவும் உடைக்கப்பட்டு 100 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன. அர்ச்சுனன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கோபி போலீஸார் அங்குள்ள தடயங்களை பதிவு செய்தனர்.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையி்ல் வீட்டு பின்புற சுற்றுச் சுவர் அருகே கிடந்த பையை போலீஸார் கைப்பற்றி சோதனை நடத்தியதில் அதில் 30 பவுன் நகைகள் இருந்துள்ளன. மர்ம நபர்கள் நகையை திருடிக் கொண்டு தப்பிச் செல்லும் போது அந்தப் பையை தவறவிட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பெண்ணின் திருமணத்துக்காக அர்ச்சுனன் வாங்கி வைத்திருந்த நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.