

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட ரவுடி ‘கருக்கா’ வினோத்தை கைது செய்துள்ள போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் ராஜ்பவன் என்றழைக்கப்படும் ஆளுநர் மாளிகை அமைந்துள்ளது. இன்று ஆளுநர் மாளிகை வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசியதாக கூறப்படுகிறது. பெட்ரோல் குண்டு வெடித்ததால், அங்கு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால், ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் ஈடுபட்ட காவல் துறையினர், இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த மர்ம நபரை மடக்கி பிடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் நடத்திய போலீஸார் நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய வினோத்தை கைது செய்துள்ள கிண்டி போலீஸார், எதற்காக ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டை வீசினார், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கருக்கா வினோத் என்பவர் ஏற்கெனவே, கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளை தமிழகம் வரும் நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.