

கோவை: கோவை கருமத்தப்பட்டி மேம்பாலத்தில் சென்ற அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதில் பயணிகள் உயிர் தப்பினர்.
சேலத்தில் இருந்து நேற்று மதியம் அரசுப் பேருந்து ஒன்று கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. சேலம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(47) என்பவர் பேருந்தை ஓட்டினார். மாலையில், 6 வழிச்சாலையில் கருமத்தம்பட்டி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருந்து புகை வந்துள்ளது.
இதைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். உடனடியாக பேருந்தில் இருந்த 63 பயணிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துநரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் பேருந்தின் உட்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து, சூலூர் மற்றும் அவிநாசி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. வயர்களில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் எனத் தெரிகிறது. கருமத்தம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர். மாற்றுப் பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் கோவைக்கு அனுப்பப்பட்டனர். மேம்பாலத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.