

வண்டலூர்: வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகனும், 9-வது வார்டு கவுன்சிலருமான அன்பரசு (33) கீரப்பாக்கம் பகுதியில் கடந்த 21-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
செங்கை மாவட்டம் காயார் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வந்தனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் பல கோணங்களில் 19 பேரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக, ஒத்திவாக்கம் பகுதி சேர்ந்த சுனில் (எ) சுதர்சன் (19), கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலாஜி (23), நெடுங்குன்றம் சேவகரத்தினம் (20), கீரப்பாக்கம் பார்த்திபன் (19) ஆகிய 4 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கடந்த ஆண்டு கூடுவாஞ்சேரி அருகே உள்ள நல்லம்பாக்கத்தில் தேவா என்ற இளைஞரை, சுதர்சன் உள்ளிட்ட 4 பேர் கொலை செய்தனர். இதனால், சுதர்சனுக்கும், இறந்த அன்பரசு நண்பர் விஜய்க்கும், முன்விரோதம் இருந்துள்ளது. விஜய்க்கு பணம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அன்பரசு செய்து வந்ததாக தெரிகிறது. அன்பரசை கொலை செய்தால் அவர் நண்பர்களுக்கு கிடைக்கும் உதவிகளைத் தடுக்கலாம் என கருதி அன்பரசை கொலை செய்தனர். எனினும், பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.