

சென்னை: புழல் சிறையில் பெண் கைதி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை புழலில் உள்ளபெண்கள் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், விசாரணை கைதிகளாகவும், தண்டனைகைதிகளாகவும் அடைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த காந்திமதி (52), சிறையில் உள்ள கழிவறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த சிறைக் காவலர்கள், காந்திமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இலவச சட்ட உதவி மையம் மூலம் காந்திமதிக்கு ஜாமீன் கிடைத்தும், உறவினர்கள் யாரும் உறுதி பத்திரம் எழுதி தர வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த காந்திமதி தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.