

ஆம்பூர்: ஆம்பூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெண் வன்கொடுமை உட்பட 4 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் குளோரி ரோசலின் (53). இவர், பர்கூரில் இயங்கி வரும் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அம்மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் என்னிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்த வேண்டும் என ஆம்பூர் சபை சங்கம் எனக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பி இருந்தனர்.
அதன்படி, கடந்த 9-ம் தேதி காலை 10.45 மணிக்கு ஆம்பூர் மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள ஆம்பூர் சபை சங்கத்துக்கு நான் சென்றேன். எனக்கு துணையாக வட்டத்தலைவரும், ஆசிரியருமான பெல்சி என்பவர் வந்தார். ஆம்பூர் சபை சங்க அலுவலகத்தில் செயலாளரும், ஆம்பூர் பி-கஸ்பா பகுதியில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருமான இம்மானுவேல் ராஜசேகரன் தலைமையில், சங்க உறுப்பினர்கள் குமணன், சாமுவேல் செல்லபாண்டியன், கிருபாகரன், சூசை கிருபானநந்தம், நேசராஜ், ராஜேந்திரன், ஞானசேகரன், ஜெபலாசர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
அப்போது, பர்கூர் கன்கார்டியா பள்ளி நிர்வாகம் தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்திய போது, நான் என் தரப்பு விளக்கம் கொடுத்தேன். அந்த நேரத்தில், கிருபாகரன், சூசை கிருபாநந்தம் மற்றும் இம்மானுவேல் ராஜசேகரன் ஆகியோர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டியும், அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பேசி என்னை தாக்கி கீழே தள்ளி மானபங்கப்படுத்த முயன்றனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த என்னுடன் வந்த ஆசிரியர் பெல்சி, செயற்குழு உறுப்பினர் அருள் அலெக்சாண்டர், நேசராஜ் ஆகியோர் என்னை மீட்டு அங்கிருந்து வெளியே அழைத்து வந்தனர். விசாரணை குழுவினர் பெண் உறுப்பினர் ஒருவர் கூட இல்லாமல் என்னிடம் விசாரணை என்ற பெயரில் என்னை மானபங்கப்படுத்தி, என்னை கீழே தள்ளி பெண் என்றும், தலைமை ஆசிரியை என்றும் பாராமல் வன்கொடுமையில் ஈடுபட்ட கிருபாகரன், சூசை கிருபாநந்தம், இம்மானுவேல் ராஜசேகரன் ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.
மனுவை பெற்ற ஆம்பூர் நகர காவல் துறையினர் இது தொடர்பாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இம்மானுவேல் ராஜசேகரன், கிருபாகரன், சூசை கிருபானந்தம் ஆகிய 3 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.