

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் உள்ள கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இதன்படி, கயிறு தொழிற்சாலையில் வேலை செய்து வரும் தாத்தாவுடன் தங்கி, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமிக்கு, தொழிற்சாலையின் உரிமையாளரான மேலநத்தம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் (70) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனிடையே, அச்சிறுமி உடல்நலன் பாதிக்கப்பட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மகளிர் போலீஸார் வந்து சிறுமி, அவரது தாத்தா மற்றும் கயிறு தொழிற்சாலையில் உள்ள முதியவர்களை அடையாளப்படுத்தி விசாரணை நடத்தியதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் தொழிற்சாலை உரிமையாளர் வேலாயுதம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வேலாயுதத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து, மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, நாகை கிளைச் சிறையில் அடைத்தனர்.