

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள ஆணை வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (72). சுகாதாரத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் முருகேசன் (48). விவசாய கூலித் தொழிலாளி.
இவரது மனைவி அஞ்சம்மாள் (45). இந்த நிலையில், முருகேசனுக்குச் சொந்தமான ஆடு, தியாகராஜன் வீட்டுக்குள் நேற்று புகுந்துள்ளது. அதை தியாகராஜன் விரட்டி விட்டதுடன், முருகேசனை கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், முருகேசனும், அவரது மனைவி அஞ்சம்மாளும் சேர்ந்து தியாகராஜனை தாக்கியுள்ளனர்.
இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த தியாகராஜன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கொரடாச்சேரி போலீஸார் அங்கு சென்று தியாகராஜன் உடலை கைப் பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து முருகேசன், அஞ்சம்மாள் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.