கூலிப்படையை ஏவி ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி: செய்யாறில் 2 இளைஞர்கள் கைது

முதல் படம் சுந்தர், அடுத்தப் படம் விக்னேஷ்
முதல் படம் சுந்தர், அடுத்தப் படம் விக்னேஷ்
Updated on
1 min read

திருவண்ணாமலை: செய்யாறில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் சென்னை கூலிப்படையை ஏவி நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, கிடங்கு தெருவில் வசிப்பவர் நடராஜன் (67). ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழிலதிபர். இவரது மனைவி ஜெயக் குமாரி (59). ஜெயக்குமாரியின் சகோதரி காஞ்சனா (50). இவர்கள் 3 பேரும், கடந்த 19-ம் தேதி பிற்பகலில் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, வீட்டுக்குள் நுழைந்த 3 இளைஞர்கள், நடராஜன், ஜெயக்குமார் மற்றும் காஞ்சனா ஆகியோர் அவரது மனைவியை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் சொத்து பத்திரங்களை கேட்டு மிரட்டியுள்ளனர். இவர்கள் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

அப்போது, பின்வாசல் வழியாக 3 இளைஞர்களும் தப்பிச் சென்றனர். அவர்கள் வந்த இரு சக்கர வாகனம், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. செய்யாறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இது குறித்து காவல் துறையினர் கூறும்போது, “கோவிலூர் கிராமம் களத்து மேட்டு தெருவில் வசிக்கும் சந்தானம் மகன் சுந்தர்(38), செய்யாறு நகரம் கொடநகர் சமாதியான் தெருவில் வசிக்கும் ரங்க நாதன் மகன் விக்னேஷ் (32) ஆகியோர் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து, சென்னை குரோம்பேட்டையில் வசிக்கும் உதயா, கரியன் மற்றும் பேபி ஆகிய 3 பேர் கொண்ட கூலிப்படையினர் மூலம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நடராஜனிடம் சுந்தர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளார். கடன் தொகைக்கான வட்டி செலுத்தவில்லை. இதனால் வட்டியுடன் அசல் தொகையை சேர்த்து ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து ரூ.4 லட்சத்தை சுந்தர் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.6 லட்சம் கொடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுந்தர், தனது நண்பர் விக்னேஷ் உதவியுடன் சென்னை குரோம்பேட்டை கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் மூலம் நடராஜன் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்” என்றனர்.

இது குறித்து செய்யாறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுந்தர், விக்னேஷ் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சென்னை கூலிப்படையைச் சேர்ந்த உதயா, கரியன், பேபி ஆகியோரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in