

வேலூர்: குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ரத்தக் காயங்களுடன் ஆண் உடல் இருப்பதாக குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு அக்.13-ம் தேதி தகவல் கிடைத்தது.
அதன்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமை யிலான காவலர்கள் விரைந்து சென்று விசாரித்தனர். அதில், கொலையான நபர் அதே பகுதியைச் சேர்ந்த சமோசா வியாபாரி ஹயாத் பாஷா (35) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 2 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
அதில், கள்ளூர் நேரு நகரைச் சேர்ந்த மற்றொரு ஹயாத் பாஷா (34) என்பவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தலை மறைவாக இருந்த அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் துறையினரின் வாகன தணிக்கையில் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மணப்பாறை சென்ற தனிப் படையினர் ஹயாத் பாஷாவை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, சமோசா வியாபாரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர் விசாரணையில், தனது மனைவி குறித்து அவர் தவறாக பேசியதால் கொலை செய்ததாக கூறினார். கடந்த 2020-ம் ஆண்டு மனைவியின் கள்ளத்தொடர்பால் சுல்தான் பாஷா என்பவரை கொலை செய்து ஹயாத் பாஷா சிறைக்கு சென்றவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சமோசா வியாபாரி கொலையில் ஹயாத் பாஷாவை காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.