

விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள வளவனூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி கொலை செய்யப்பட்டது குறித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வளவனூர் கே.எம்.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராஜன்(68). இவரது மனைவி உமாதேவி (65). இருவரும் அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள். இவர்களின் மகன் ராஜராஜசோழன் திருமணமாகி, பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர்களது மகள் பத்மா திருமணமாகி, புதுச்சேரியில் வசித்து வருகிறார்.
வளவனூரில் உள்ள வீட்டில் ஆசிரியர் தம்பதி மட்டும் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பத்மா தனது பெற்றோருக்கு செல்போன் செய்துள்ளார். நீண்ட நேரமாக செல்பான் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால், அக்கம்பக்கத்தினரை தொடர்புகொண்டு, பெற்றோர் வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் நேரில் சென்று பார்த்தபோது, இருவரும் தனித்தனி அறைகளில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த டிஐஜி ஜியாவுல்ஹக், எஸ்.பி. சஷாங்சாய் மற்றும் வளவனூர் போலீஸார் அங்கு சென்று, விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இருவரின் உடல்களையும் மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்த போலீஸ் தரப்பில் கூறியதாவது: கணவன்-மனைவி இருவரும் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு வெளியே சென்றுவிட்டு, பின்னர் வீடு திரும்பியுள்ளனர். வீட்டில் வேலை செய்த பணிப்பெண் மாலையில் பணியை முடித்துவிட்டு, அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மாலை 5 மணிக்கு வழக்கம்போல அங்கு வந்த பால்காரர், வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், திரும்பிச் சென்றுள்ளார்.
6 தனிப்படைகள் அமைப்பு: இருவரும் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவர்களைக் கொலை செய்துள்ளனர். ராஜன் கழுத்து நெறிக்கப்பட்டும், உமாதேவி தலையணையால் முகத்தில் அழுத்தப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பத்மா அளித்த புகாரின்பேரில் வளவனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றவாளிகளைக் கண்டறிய, டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.