சோழன் விரைவு ரயிலில் தூங்கிய பயணியிடம் தங்க நகை, பணம் திருடிய இளைஞர் கைது

சோழன் விரைவு ரயிலில் தூங்கிய பயணியிடம் தங்க நகை, பணம் திருடிய இளைஞர் கைது
Updated on
1 min read

சென்னை: திருச்சி மாவட்டம் கள்ளத்தெருவைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன்(55). இவர் தங்க நகை விற்பனைக்காக, திருச்சியிலிருந்து கடந்த 10-ம் தேதிபுறப்பட்டு, ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்குச் சென்றார். வியாபாரத்தை முடித்துவிட்டு, மீண்டும் ஆந்திராவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கடந்த 13-ம் தேதி வந்தார்.

தொடர்ந்து, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சோழன் விரைவுரயிலில் எஸ்-2 பெட்டியில் சந்தானகிருஷ்ணன் ஏறினார். சிறிது நேரத்தில், தனது பையைக் கீழே வைத்துவிட்டுத் தூங்கிவிட்டார். அந்தப் பையில் 12 காரட் தங்க மூக்குத்திகள், எமரால்ட் கற்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவை இருந்தன.

ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் சந்தானகிருஷ்ணன் கண்விழித்துப் பார்த்தபோது, அவரது பை மாயமாகியிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், எழும்பூர் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், எழும்பூர் ரயில்வே காவல் டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள், ரயில் நிலையத்திலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒருநபர் சந்தானகிருஷ்ணனின் பையை எடுத்துக் கொண்டு ரயில் நிலையத்திலிருந்து வெளியேறுவது தெரியவந்தது.

அந்த நபரின் உருவ அடையாளத்தை வைத்து ஆய்வு செய்தபோது, ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் ஏற்கெனவே பிடித்து விசாரிக்கப்பட்ட புரசைவாக்கம், முத்தையா நாயகர் தெருவைச்சேர்ந்த அச்சுதநந்தன் என்ற உதயகுமார்(21) என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த நபரின் விவரத்தைத் திரட்டி,ரயில்வே போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்நிலையில், புரசைவாக்கம் பகுதியில் ஒரு கடையில் அமர்ந்திருந்த அவரைரயில்வே போலீஸார் நேற்று முன்தினம்கைது செய்தனர். பின்னர் அவரிடம்நடத்திய விசாரணையில், சந்தானகிருஷ்ணன் பையைத் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அந்த நபரிடம் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க மூக்குத்திகள், எமரால்ட் கற்கள், ரூ.15 ஆயிரம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in