

நாகர்கோவில்: குலசேகரம் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் கைதான பேராசிரியர் பரமசிவத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் மூகாம்பிகா தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி கடந்த 6-ம் தேதி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் தேடப்படும் பயிற்சி மருத்துவர்கள் இருவருக்கு மதுரை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் மாணவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பேராசிரியர் பரமசிவத்தை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, நாகர்கோவில் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மாஜிஸ்திரேட் விஜய லட்சுமி விசாரித்து, ஒரு நாள் மட்டும் பேராசிரியர் பரமசிவத்தை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பரமசிவத்தை போலீஸார் நேற்று காவலில் எடுத்தனர். மீண்டும் அவரை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளனர்.