

கோவை: கோவை மாநகரில் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனையாகும் ‘கிளப்’களில் விதிமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அரசு நிறுவனமான டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அது தவிர, தமிழ்நாடு மதுபான விற்பனை உரிம விதிகளின்படி, உரிமம் பெற்ற ‘கிளப்’கள், ஹோட்டல்கள், மனமகிழ் மன்றங்கள் உள்ளிட்டவற்றி்ல் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு உள்நாட்டு மதுபான வகைகள் மட்டுமின்றி, வெளி நாட்டு வகை மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இது போன்ற ‘கிளப்’களில் அரசு விதித்த விதிகள் மீறப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து குடியிருப்பு சங்கங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: அரசு அறிவித்த விதிமுறைகள், கோவை மாநகரில் உள்ள கிளப்புகள், மனமகிழ் மன்றங்களில் பின்பற்றப்படுவதில்லை. வெளிநாட்டு மதுபானங்கள் விற்கும் ‘கிளப்’கள், அங்கு உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும், இரவு 11 மணிக்கு மேல் விற்கக் கூடாது. ஓர் அறைக்குள் மட்டுமே மது வகைகளை விற்க வேண்டும்.
அறைக்குள் மட்டுமே ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் என ஏராளமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு மதுபானங்கள் விற்கும் கிளப்புகளில் இவை பின்பற்றப்படுவதில்லை. உதாரணத்துக்கு, பீளமேடு எஸ்.ஓ பங்க் பகுதியில் இயங்கும் வெளிநாட்டு மதுபானம் விற்கும் கிளப்பில் நிர்ணயிக்கப்பட்ட நேரமான இரவு 11 மணியை தாண்டி அதிகாலை வரை மது விருந்துகள் நடைபெறுகின்றன.
ஒலிபெருக்கிகளின் ஒலி அளவை, அதிக சத்தத்தில் பயன்படுத்து கின்றனர். இதனால், மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஒரு உரிமம் பெற்றுக் கொண்டு அறைக்கு உள்ளேயும், வளாகத்தின் வெளியிலும் மதுபானம் விற்கின்றனர். உறுப்பினர் அல்லாத நபர்களுக்கு வெளி நாட்டு மதுபானங்களை விற்கின்றனர். இதனால் இந்த கிளப்பில் இரவு நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மதுபோதையில் நள்ளிரவு நேரத்தில் இங்கிருந்து வெளியேறும் நபர்கள், விபத்து ஏற்படும் வகையில் தங்களது வாகனங்களில் அதிவேகமாக செல்கின்றனர். கிளப் அருகே குடியிருப்பு வாசிகளுடன் தகராறில் ஈடுபடுகின்றனர். இதுபோல் தான் மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள ‘கிளப்’களில் விதிமீறல்கள் நடக்கின்றன. இவற்றை தடுக்க மாநகர காவல் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
கோவை மாநகர காவல் துறையினர் கூறும்போது, ‘‘மது விற்பனைக் கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் இயங்குவதோடு, விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விதிமீறல் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.