கே.கே.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் மண்ணெண்ணெய் குண்டுவீச்சு

கே.கே.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் மண்ணெண்ணெய் குண்டுவீச்சு
Updated on
1 min read

சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் முகமூடி அணிந்த மர்ம நபர் மண்ணெண்ணெய் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கே.கே. நகரில் உள்ள சிவலிங்கபுரத்தில் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. கடந்த 14-ம் தேதி மாலை 6.55 மணி அளவில் முகமூடி அணிந்து இப்பகுதிக்கு வந்த நபர் ஒருவர், மண்ணெண்ணெய் நிரப்பி தயாராக வைத்திருந்த மது பாட்டிலை தீப்பற்ற வைத்து, குடியிருப்பு வளாகத்துக்குள் வீசினார். இதில் அந்த பாட்டில் சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக சேதம் எதுவும் இல்லை.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கே.கே.நகர் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த குடியிருப்பில் வசிக்கும் ராஜன் (53) என்பவரை இலக்காக வைத்து இத்தாக்குதல் நடந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ராஜனும், அவரது மகன்களும் கடந்த 11-ம் தேதி கே.கே.நகர் ஒட்டகபாளையம் பகுதியை சேர்ந்த ராகேஷ் என்பவரிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் ராஜனின் மகன்கள் சதீஷ், விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ராகேஷின் நண்பர்கள் இத்தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in