

சென்னை: எழும்பூரில் தனியார் நிறுவன ஊழியரை கத்தி முனையில் மிரட்டி ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 7 பேர் கும்பலை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை, நெற்குன்றம், ஜெயராம் நகர் 1-வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (43). இவர் பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 7-ம் தேதி இரவு, தான் வேலை செய்யும் நிறுவனத்தின் பணம் ரூ.30 லட்சத்தை எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் பாரிமுனையில் இருந்து கோயம்பேடு அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வழியில் எழும்பூர், ஈ.வெ.ரா. சாலையில் தேவாலயம் அருகே வந்தபோது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கும்பல் சக்திவேலை வழிமறித்து, கத்தி முனையில் ரூ.30 லட்சத்தை பறித்து தப்பியது. இதுகுறித்து, எழும்பூர் போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பிரதீப்குமார் (24), பெரும்பாக்கம் எழில்நகர் விஜயபாபு (28), ஆயிரம் விளக்கு டேவிட் என்ற வினோத் (30), போரூர் இளங்கோ (29), பெரம்பூர் பரத் (22), மாமல்லபுரம் மதன் (33), கண்ணகி நகர் ராஜேஷ் (36) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட பிரதீப்குமார், விஜயபாபு, டேவிட் மற்றும் 2 பேர் ஏற்கெனவே கடந்த மாதம் 25-ம் தேதி எழும்பூர், பாந்தியன் சாலை, பெட்ரோல் பங்க் அருகில் பாலகிருஷ்ணன் என்பவரிடம் ரூ.3 லட்சம் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.16.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.