

சென்னை: சுங்கத் துறையில் ஓட்டுநர் உள்ளிட்ட 4 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் காதில் ‘ப்ளூடூத்’ கருவி பொருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் 30 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுங்கத் துறையில் 7 ஓட்டுநர் பணி, 8 கேண்டீன் உதவியாளர், ஒரு சமையலர், ஒரு எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு சென்னை பாரிமுனையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் நாடு முழுவதும் இருந்து 1,600 பேர் பங்கேற்றனர். 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தேர்வு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
50 மதிப்பெண்கள் கொண்ட இந்தத் தேர்வு ஒரு மணி நேரம் நடைபெற்றது. தேர்வு நடைபெற்றபோது, தேர்வர்கள் ஒருசிலரின் நடவடிக்கைகள், அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்களை சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் தங்களது காதில் சிறிய அளவிலான ‘ப்ளூடூத்’கருவி பொருத்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தேர்வு எழுதிய அனைவரையும் கண் காணிப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில் 30 வடமாநில இளைஞர்கள், காதில் சிறிய அளவிலான ‘ப்ளூடூத்’ கருவி பொருத்தி மோசடியில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களில் 28 பேர் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள், 2 பேர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் தேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட 30 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, கடந்த 2022-ம் ஆண்டு பாதுகாப்புத் துறையில் உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நந்தம் பாக்கத்தில் நடந்தபோது, ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ‘ப்ளூடூத்’ மூலம் பதிலை பெற்றும், ஆள் மாறாட்டம் செய்தும் முறைகேட்டில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.