

திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காமன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிமேகலை (41). கணவர் இறந்த நிலையில், 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.
இவர், வறுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இதில், விஷ்வ இந்து பரிஷத் மாநில செயற் குழு உறுப்பினர் என்ஆர்என்.பாண்டியன் வீட்டிலும் 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்தார். அப்போது, பாண்டியன் அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிமேகலை புகார் அளித்தார். ஆனால், பாண்டியன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், பாண்டியனின் உறவினர்கள் மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பாலியல் தொந்தரவு அளித்த பாண்டியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மணிமேகலை வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது, பாண்டியன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக திருச்சி மாவட்ட காவல் துறை தரப்பில் நீதிபதியிடம் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, என்.ஆர்.என்.பாண்டியன் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பால கிருத்திகா நேற்று முன்தினம் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.