Published : 14 Oct 2023 06:01 AM
Last Updated : 14 Oct 2023 06:01 AM
கிருஷ்ணகிரி: ஓசூரில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த உதவி வருவாய் அலுவலர் உட்பட 7 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோகுல் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு (பகுதி 16) சொந்தமான நிலம் உள்ளது. இதில் குலுக்கல் முறையில் விற்பனை நடைபெற்ற நிலத்தை சிலர், போலியாக ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக, வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கருக்கு புகார் வந்தது. இதுகுறித்து அவர், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜா ரவி தங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, எஸ்ஐ மஞ்சுநாத் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வீட்டுவசதி வாரிய நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து திருப்பூர் மாவட்டம் மானூரைச் சேர்ந்த மதி (எ) மதியழகன் (50), சென்னை அய்யம்பாளையத்தை சேர்ந்த தர்(55), சென்னை மாதவரத்தை சேர்ந்த ஆராவமுது (58), திருவள்ளூர் மாவட்டம் அய்யம்பாக்கம் திருவேற்காட்டை சேர்ந்த முருகதாஸ் (55), கன்னியாகுமரி மாவட்டம் கட்டாந்துரையை சேர்ந்த ஆனந்த் (50), ஓசூர் பாரதி தாசன் நகரை சேர்ந்த சதீஷ் (37), சென்னை சத்திரத்தை சேர்ந்த டேனியல் (48) ஆகிய 7 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இதில், ஆராவமுது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி வருவாய் அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். இதே போல் மதி (எ) மதியழகன், ஈரோட்டில் ஈமு கோழி மோசடியில் ஏற்கெனவே தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கைதான 7 பேரிடம் இருந்து 13 செல்போன்கள், 62 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 2 கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதான 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், கிருஷ்ணகிரி, தருமபுரி கிளைச் சிறைகளில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT