சென்னை அம்பத்தூர் கிடங்கில் 2,000 கிலோ குட்கா பறிமுதல்

ராஜா, ஜோசப், குலாம் மொய்தீன், அருணாச்சலம்,
ராஜா, ஜோசப், குலாம் மொய்தீன், அருணாச்சலம்,
Updated on
1 min read

சென்னை: அம்பத்தூர் கிடங்கில் 2 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆலோசனையின் படி ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை எழில்நகர் மற்றும் நேரு நகர் 6-வது தெரு சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் வந்த 2 பேர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், ஆட்டோவிலிருந்த மூட்டையை சோதனை செய்தபோது, அதில் குட்கா புகையிலை பாக்கெட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் மேலும் சிலருடன் சேர்ந்து அம்பத்தூரில் உள்ள கிடங்கை வாடகைக்கு எடுத்து, அங்கு குட்கா புகையிலை பாக்கெட்களை பதுக்கி வைத்து, சென்னையில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து குட்கா புகையிலை பாக்கெட்களை பதுக்கி வைத்து விநியோகம் செய்துவந்த கொடுங்கையூர் ஜோசப்(42), அம்பத்தூர் குலாம் மொய்தீன்(35), கொளத்தூர் அருணாச்சலம்(30), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ராஜா(27) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அம்பத்தூரில் உள்ள கிடங்கில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 2,176 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.23 லட்சத்து 40 ஆயிரம் என போலீஸார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளிகள் மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in