சென்னை | அண்ணன் கொலைக்கு பழி தீர்த்த தம்பி: ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண்

சரவணன் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைந்தவர்கள்
சரவணன் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைந்தவர்கள்
Updated on
1 min read

சென்னை: மதுரவாயலில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் பி.என்.கே.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்ற கிழங்கு சரவணன்(41). காவல்துறையின் ரவுடிகள் பட்டியலில் ஏ பிளஸ் வரிசையில் இருந்தார். இவர் மீது கொலைவழக்குகள் உள்பட 13 வழக்குகள் உள்ளன. சரவணனுக்கு அச்சுறுத்தல் இருந்ததால், மயிலாப்பூரை விட்டு மதுரவாயல் அருகே உள்ள வானகரம், சக்தி நகருக்கு அண்மையில் குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார்.

இந்நிலையில் சரவணன், மனைவி, மகளுடன் ஆட்டோவில் மதுரவாயல் கன்னியம்மன் நகர் பிரதான சாலையில் செல்லும்போது 4 இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல், அந்த ஆட்டோவை வழிமறித்து சரவணனை அரிவாளால் வெட்டியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த, அவரது குடும்பத்தினர் தடுக்க முயன்றனர்.

அரிவாள்வெட்டில் பலத்தகாயமடைந்த சரவணன் மயங்கி விழுந்ததும், அந்த கும்பல்அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து சரவணனை குடும்பத்தினர் மீட்டுகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சரவணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கிழங்கு சரவணன்
கிழங்கு சரவணன்

இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரவணன், கடந்த மாதம் 17-ம் தேதி தான் வெளியே வந்ததும், அவரை நோட்டமிட்டு பழிக்குப்பழியாக கொலை நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் தலைமறைவான கொலையாளிகளை மதுரவாயல் போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்நிலையில், இக்கொலை தொடர்பாக மயிலாப்பூரைச் சேர்ந்த நித்யானந்தம் (42), அவரது கூட்டாளிகள் பவித்ரன் (28), கண்ணியப்பன் (34), கோபால்(34), சையது (33) ஆகிய 5 பேர் ஆற்காட்டில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்துள்ளனர். இவர்களில் நித்யானந்தம் ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவக்குமாரின் தம்பியாவார்.

அண்ணன் கொலைக்கு பழிவாங்கும் வகையிலேயே சரவணனை நித்யானந்தம் கூட்டாளிகளுடன் சென்று தீர்த்துக் கட்டியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in