

சென்னை: இறந்த குழந்தையை கூவம் ஆற்றில் வீசிச் சென்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேர தேடுதலுக்குப் பின்னர் குழந்தை உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் அருகே உள்ள கூவம் ஆற்றில் நேற்று காலைஇளைஞர் ஒருவர், பிறந்து சில நாட்களேஆன குழந்தை ஒன்றை வீசிச் சென்றார். இதைக் கண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, இதுகுறித்து தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து ரப்பர் படகு மூலம் கூவம் ஆற்றில் குழந்தையை தேடினர். தகவல் அறிந்து ஆயிரம் விளக்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன்தாஸ் தலைமையிலான போலீஸாரும் சம்பவ இடம் விரைந்தனர்.
குழந்தையை வீசிச் சென்ற இளைஞர், கொலை செய்து குழந்தையை வீசிச் சென்றாரா? அல்லது ஆற்றில் வீசி கொலை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. முதல்கட்டமாக அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்ததில், குழந்தையை கூவம் ஆற்றில் வீசிச் சென்றது கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(24) என்பது தெரியவந்தது.
அவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். கடந்த 10-ம் தேதி எழும்பூரில் உள்ள மகப்பேறு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்துள்ளது. பின்னர், குழந்தை உடலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழந்தையை அடக்கம் செய்ய பணம் தேவைப்படும் என்பதால், யாருக்கும் தெரியாமல் குழந்தையை எடுத்து வந்துசந்தோஷ் குமார் கூவம் ஆற்றில் வீசியுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இதுகுறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள்,அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு குழந்தை உடல் மீட்கப்பட்டு, தாய் சுகன்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சந்தோஷ்குமாரை போலீஸார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.