Published : 13 Oct 2023 06:20 AM
Last Updated : 13 Oct 2023 06:20 AM
ஆவடி: ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரண் என்கிற பச்சைக்கிளி (21). இவர் மீது ஜெ.ஜெ.நகர், மதுரவாயல், திருமுல்லைவாயல் ஆகிய காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சரண் நேற்று தன் நண்பர் சந்தோஷ்(22) உடன் பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு சென்று, அங்கு இருவரை சந்தித்து பேசிவிட்டு மீண்டும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருவேற்காடு-அம்பத்தூர் சாலையில், அயப்பாக்கம், அபர்ணா நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அவர்களை மர்ம கும்பல் 3 பைக்குகளில் விரட்டியுள்ளது.
உடனே சந்தோஷ் பைக்கை சாலையில் போட்டுவிட்டு, சரணுடன் வேகமாகத் தப்பியோடினார். அப்போது, மர்ம கும்பல், சரணை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று, முட்புதரில் வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பியோடியது.
தகவல் அறிந்த திருமுல்லைவாயல் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, சரணின் உடலை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார், துணை ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
திருமுல்லைவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக ரவுடி சரண் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT