

அகமதாபாத்: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு போலி டிக்கெட்கள் அச்சடித்து விற்பனை செய்த 4 இளைஞர்களை அகமதாபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் 14-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டி கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்களை போலியாக அச்சடித்து விற்பனை செய்த அகமதாபாத்தை சேர்ந்த ஜெய்மின் பிரஜாபதி, துருமில் தாகூர், ராஜ்வீர் தாக்கூர், குஷ் மீனா ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து 200 போலி டிக்கெட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்த 50 டிக்கெட்களும் அடங்கும். கைது செய்யப்பட்டவர்களில் ஜெய்மின் பிரஜாபதி, அகமதாபாத் மைதானத்தின் அருகே வசித்து வந்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண்பதற்கான டிக்கெட்டை பெற ரசிகர்களிடத்தில் அதிக அளவில் ஆர்வம் காணப்படுவதை உணர்ந்த பிரஜாபதி, முதலில் அசல் டிக்கெட் ஒன்றை வாங்கி உள்ளார்.
இதன் பின்னர் போலி டிக்கெட் அச்சடிக்கும் ஆலோசனையை துருமில் தாகூர், ராஜ்வீர் தாக்கூர் ஆகியோரிடம் கூறியுள்ளார். தங்களது திட்டத்தை செயல்படுத்துவதற்காக பிரிண்ட் கடை வைத்திருந்த குஷ் மீனாவை அணுகி உள்ளனர். இதைத் தொடர்ந்து அசல் டிக்கெட்டை ஸ்கேன் செய்து அதனை சமூக வலைதளங்களில் தங்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விற்றுள்ளனர். ரூ.2 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை டிக்கெட்டை விற்றுள்ளனர்.
டிக்கெட்கள் உடனுக்குடன் விற்பனையானதை தொடர்ந்து 200 டிக்கெட்கள் வரை அச்சடித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அகமதாபாத் போலீஸார் போடக்தேவ் பகுதியில் உள்ள பிரிண்ட் கடையில் சோதனை நடத்தி 4 பேரையும் கைது செய்ததுடன் பிரிண்டர், செல்போன், பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.