ஐஏஎஸ் அதிகாரி என கூறிக்கொண்டு சினிமாவில் வேலை வாங்கிக் கொடுக்கும்படி உதவி இயக்குநரை மிரட்டியவர் கைது

ஐஏஎஸ் அதிகாரி என கூறிக்கொண்டு சினிமாவில் வேலை வாங்கிக் கொடுக்கும்படி உதவி இயக்குநரை மிரட்டியவர் கைது
Updated on
1 min read

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு சினிமா துறையில் வேலை வாங்கிக் கொடுக்கும்படி உதவி இயக்குநரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராயபுரம், கண்ணதாசன் நகர் பகுதியில் வசிப்பவர் செந்தில் (40). சினிமா துறையில் உதவி இயக்குநராக உள்ளார். மேலும், படப்பிடிப்புக்குத் தேவையான இடங்களைத் தேர்வு செய்து கொடுக்கும் வேலையையும் செய்து வருகிறார்.

இவரது செல்போனுக்கு கடந்த 6-ம் தேதி அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், தன்னை மூத்த ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டார். தான் அனுப்பி வைக்கும் 2 பேருக்கு சினிமா துறையில் ஏதாவது வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதற்கு செந்தில், “சினிமா துறையில் வேலை வாங்கிக் கொடுக்கக்கூடிய அளவுக்கு நான் இல்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு என்னை தொடர்பு கொண்டுள்ளீர்கள்” என்று கூறினார். இதில், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பு நபர், “உன்னை போலி வழக்கில் சிறையிலடைத்து விடுவேன்” என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், விரக்தி அடைந்த செந்தில் இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி மிரட்டியவர் விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி, பாண்டியன் நகர் 4-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த செந்தில்நாதன் (44) என்பது தெரியவந்தது. அவரை அங்கு சென்று கைது செய்த போலீஸார் 4 செல்போன்களை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

மேலும், நடத்தப்பட்ட விசாரணையில் செந்தில்நாதன் ஐஏஎஸ் அதிகாரி இல்லை என்பதும், அவர் விழுப்புரம் பகுதியில் உள்ள கோயில்களில் பஜனை பாடும் வேலை செய்து கொண்டு, இதுபோன்று குற்றச்செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in