Published : 11 Oct 2023 08:45 AM
Last Updated : 11 Oct 2023 08:45 AM
கோவை: குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக, கோவையில் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை நடத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள மணவாளபுரத்தைச் சேர்ந்தவர் முத்து ராஜ். இவர் குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றபோது, ஒன்றரை வயது மகன் ஹரிஷை பெண் ஒருவர் கடத்திச் சென்று விட்டார். இது குறித்து திருச்செந்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
அதில், குழந்தையை கடத்திச் சென்றது சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பாண்டியன்(45), அவரது மனைவி திலகவதி(40) ஆகியோர் எனத் தெரியவந்தது. கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகேயுள்ள பூண்டியில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும் கோவை காவல்துறையினரின் உதவியுடன் திருச்செந்தூர் காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பின்னர், இருவரையும் ஆலாந்துறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது மயக்கமடைந்த திலகவதி உயிரிழந்தார். இது தொடர்பாக ஆலாந்துறை போலீஸார், காவல் நிலைய மரணம் பிரிவில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த திலகவதியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல் விசாரணையின் போது, திலகவதி உயிரிழந்ததால், அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து அறிய ஜே.எம்.5 மாஜிஸ்திரேட் சந்தோஷ் நேற்று ஆலாந்துறை காவல் நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த காவலர்களிடம் விசாரித்தார்.
அரசு மருத்துவமனைக்கும் நேரில் சென்று விசாரித்தார். தொடர்ந்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் திலகவதியின் சடலத்துக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. திலகவதியின் உடலில் காயங்கள் ஏதாவது உள்ளதா எனவும் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்தார். பிரேதப் பரிசோதனை முடிந்து திலகவதியின் உடல் அவரது உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே, திலகவதி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்தது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திலகவதி, காவலர்கள் பார்க்காத போது, தான் மறைத்து எடுத்துச் சென்ற விஷத்தை சாப்பிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொடி வகையிலான விஷத்தை அவர் சாப்பிட்டிருக்கலாம் என்பதை அறிந்த காவல்துறையினர், அது எந்த வகையிலான விஷம் என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், திலகவதி மீது சேலம் காவல் நிலையங்களில் ஏற்கெனவே திருட்டு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, கைதான பாண்டியன் விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவிப்பதாகவும், திருச்செந்தூரில் கடத்திய குழந்தையை சேலத்தில் உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு, கோவைக்கு மற்றொரு குழந்தையை கடத்துவதற்காக வந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT