

வேலூர்: பெங்களூருவைச் சேர்ந்த வியாபாரியை காட்பாடிக்கு வரவழைத்து ரூ.7.30 லட்சம் பணத்தை நூதன முறையில் காரில் பறித்துச் சென்ற பெண் உள்ளிட்ட 8 பேர் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 4 கார்களையும், ரூ.7.30 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் பர்வேஷ் அஹ்மது (53). இவர், சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரிடம் இருந்து வீட்டு உபயோக பொருட்களை வாங்கி பெங்களூருவில் விற்பனை செய்து வந்தார்.
கடந்த மாதம் பொருட்களை வாங்க இஸ்மாயிலை தொடர்பு கொண்டபோது, தன்னிடம் பொருட்கள் இருப்பு இல்லாததால், காட்பாடியைச் சேர்ந்த சங்கர் என்பவரை தொடர்பு கொள்ளுமாறு கூறி அவரது கைபேசி எண்ணையும் கொடுத்துள்ளார். அதன்படி, சங்கரை தொடர்பு கொண்டபோது காட்பாடிக்கு நேரில் வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, பெங்களூருவில் இருந்து பர்வேஷ் அஹ்மது தனது காரில் நண்பர்களுடன் கடந்த சனிக்கிழமை காட்பாடியில் சங்கரை சந்தித்துள்ளார். அப்போது, திருவலத்தில் உள்ள கிடங்கில் பொருட்கள் இருப்பதாக சங்கர் கூறியதன் பேரில் அவரது காரில் பர்வேஷ் மற்றும் அவரது நண்பர்கள் புறப்பட்டுள்ளனர்.
மேலும், காரில் வைத்து ரூ.7.30 லட்சம் பணத்தை சங்கரிடம் கொடுத்துள்ளார். அந்த கார் அம்முண்டி அருகே சென்றோது மற்றொரு காரை குறுக்கே வந்து நிறுத்தியுள்ளனர். அந்த காரில் காவலர் சீருடையில் இருந்த ஒருவர் உள்பட 4 பேர் பர்வேஷ் அஹ்மது அமர்ந்திருந்த காருக்கு வந்தனர். அப்போது, பர்வேஷ் அஹ்மது மற்றும் அவரது நண்பர்களை விசாரணைக்காக காரில் இருந்து கீழே இறங்குமாறு கூறியுள்ளனர்.
அதை நம்பி கீழே இறங்கியதும் காவலர் சீருடையில் இருந்த மர்ம நபர்கள் காரில் ஏறியுள்ளனர். சில நிமிடங்களில் அந்த காரும், மற்றொரு காரும் அங்கிருந்து திடீரென வேகமாக புறப்பட்டு சென்றது. என்ன நடக்கிறது என தெரியாமல் திகைத்த பர்வேஷ் அஹ்மது மற்றும் அவரது நண்பர்கள் சிறிது நேரம் கழித்து சங்கரை தொடர்பு கொண்டபோது பேச முடியவில்லை.
இது குறித்து, காட்பாடி காவல் நிலையத்தில் பர்வேஷ் அஹ்மது அளித்த புகாரின் பேரில் காவலர் சீருடையில் வந்து பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.
தனிப் படையினர் விசாரணை: மேலும், காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனி தலைமையில் ஆய்வாளர் தமிழ் செல்வன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக விசாரித்தனர். அதில், பெங்களூரு வியாபாரியிடம் வழிப்பறி செய்த வழக்கில் சங்கர், மணி வண்ணன், சீனிவாசன், முருகன் அவரது மனைவி லட்சுமி, சிவா, பொன்ராஜ், சந்தோஷ் உள்ளிட்ட 8 பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நான்கு கார்கள் மற்றும் ரூ.7.30 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘இஸ்மாயில் என்பவர் வியாபாரிகளை வரவழைத்து வழிப் பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது கார் ஓட்டுநராக இருந்த சங்கர் என்பவர் இஸ்மாயிலை போன்று தனியாக குழு வைத்து வழிப் பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுவரை 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகைள ஏமாற்றி பணத்தை பறித்துள்ளார். ஆனால், புகார் எதுவும் வரவில்லை. தற்போது வந்துள்ள புகாரின் பேரில் சங்கர் கும்பல் கைதாகியுள்ளது’’ என்றனர்.