

செங்கல்பட்டு: சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த சூசை என்பவர் மகன் லாரன்ஸ், கடந்த 2018-ம் ஆண்டு ஆக.27-ம் தேதி 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் லாரன்ஸ்-ஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி முன்பு நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட லாரன்ஸ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இதை அடுத்து லாரன்ஸ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.