Published : 10 Oct 2023 04:14 AM
Last Updated : 10 Oct 2023 04:14 AM

குமரி மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் தொடர்புடைய மாணவர் தலைமறைவு

சுஜிர்தா

நாகர்கோவில்: மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் உடன் படித்த மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.

தூத்துக்குடி விடிசி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் சுஜிர்தா(27) கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முது நிலை மயக்கவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 6-ம் தேதி கல்லூரி விடுதி அறையில் இறந்து கிடந்தார். ஊசிபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சுஜிர்தா எழுதிய கடிதத்தை குலசேகரம் போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் கல்லூரி பேராசிரியர் டாக்டர் பரமசிவம், முதுகலை மாணவர், மாணவி ஆகியோர் மன ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் 3 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர் தலைமறைவானது தெரியவந்துள்ளது.

இதனால் அவரது சொந்த ஊரான சென்னைக்கு போலீஸார் சென்றுள்ளனர். இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையில் போலீஸார் மருத்துவக் கல்லூரிக்கு சென்று சுஜிர்தாவின் செல்போன், லேப் டாப் ஆகியவற்றை கைப்பற்றி ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். சுஜிர்தா தற்கொலை தொடர்பான ஆதாரங்கள், தகவல்கள் தெரிந்தவர்கள் 94981 95077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பாமக புகார்: இந்நிலையில் முகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் கடந்த 5 ஆண்டுகளில் இது போல் சில மருத்துவ மாணவ, மாணவியர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் பாமகவினர் நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் மனு அளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x