

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பட்டா பெயர் மாற்றுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ இன்று கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மேற்கு காளையார் கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (45). விவசாயி. உள்ளூரில் தனக்குச் சொந்தமான இடத்தை அளந்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இடத்தை அளந்து கொடுப்பதற்கு விஏஓ பாலமுரளி (37) என்பவர் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலகிருஷ்ணன், இது குறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதையடுத்து, மேற்குகாளையார் கரிசல்குளத்தில் உள்ள விஏஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமி நாதன் மற்றும் போலீஸார் இன்று சாதாரண உடையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, விவசாயி பாலகிருஷ்ணனிடமிருந்து விஏஓ பாலமுரளி ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் விஏஓ பாலமுரளியை கைது செய்தனர். மேலும், அவர் கையிலிருந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக் களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட விஏஓ பாலமுரளி அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பதால் அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.