

சென்னை: நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 7 மாதங்களாக தலைமறைவாக இருந்துவந்த பிரபல ரவுடியை திருமங்கலம் சரக உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.
சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாடி குப்பத்தைச் சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளி டேனியல் (29). போலீஸாரின் ரவுடி பட்டியலில் ‘ஏ’ பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். இவர் மீது 2 கொலை வழக்கு உட்பட 8 குற்ற வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், இவர் 2019-ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் 21.03.23-ல் பிடியாணை பிறப்பித்தது. கடந்த 7 மாதங்களாக தனிப்படை போலீஸார் அவரை தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில், திருமங்கலம் சரக காவல் உதவி ஆணையர் வரதராஜன் தலைமையில் ஆய்வாளர்கள் ஜார்ஜ் மில்லர், சூரியலிங்கம் உட்பட 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
போலீஸார் தேடுவதை அறிந்த டேனியல் செல்போனில் பேசுவதை தவிர்த்து, வெளிநாட்டு ஐபோன் ஆப் மூலமாக நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். மேலும், தனது இருப்பிடத்தை அவ்வப்போது மாற்றி வந்தார். இதனால், அவரை பின் தொடர்வதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
இருப்பினும், அவரது நடமாட்டத்தை சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் தனிப்படை போலீஸார் உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், ரவுடி டேனியலின் நடமாட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு முகாமிட்ட போலீஸார் சாதாரண உடையில் 4 நாட்களாக தொடர்ந்து கண்காணித்தனர். இந்நிலையில், அவரை அங்குவைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர், அவரை சென்னை அழைத்து வந்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘காஞ்சிபுரத்தில் அண்மையில் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வாவின் நெருங்கிய நண்பராக டேனியல் வலம் வந்தார். அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்.பி.யுமான கதிர் ஆனந்தின் வெளிநாட்டு சொகுசு காரை தீயிட்டு எரித்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.