Published : 09 Oct 2023 06:15 AM
Last Updated : 09 Oct 2023 06:15 AM
சென்னை: முன்பகையில் இளைஞரின் கண் பார்வை பறிபோக காரணமானவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை காசிமேடு ஜிஎம்பேட்டை வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ் (24), நவீன் (18), ரஞ்சித்குமார் (23), அஜித் (20) மற்றும் பாஸ்கர் (48). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்பவருக்கும் இடையே முன் பகை இருந்துள்ளது.
இந்நிலையில், 2017 ஆக.21-ல் செங்காளம்மன் கோயில் அருகே ரமேஷ், நவீன் உள்ளிட்ட ஐந்து பேரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த அர்ஜுனின் தம்பி அருணை, ரமேஷ் உள்பட ஐந்து பேரும் கத்தி முனையில் வழிமறித்து ஆபாசமாக பேசியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பியோட முயன்ற அருணை, பீர் பாட்டிலால் நவீன் குத்தியுள்ளனர்.
காசிமேடு போலீஸ் வழக்கு: இதில் படுகாயம் அடைந்த அருணின் வலது கண் பார்வை பறிபோனது. சம்பவம் குறித்து அருண் அளித்த புகாரின்படி, ரமேஷ், நவீன் உள்பட ஐந்து பேர் மீது காசிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
போலீஸார் தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோவிந்தராஜன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி டி.லிங்கேஸ்வரன் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ரமேஷ், ரஞ்சித்குமார், அஜித் மற்றும் பாஸ்கர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.
ரூ.3 லட்சம் அபராதம்: ஆயுதங்கள் கொண்டு நவீன், அருணை தாக்கியதில் வலது கண் பார்வை பறிபோனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை கண் பார்வை இழந்த அருணுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT