

சென்னை: திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்த சென்னையை சேர்ந்த இளம்பெண்ணிடம் நூதன முறையில் ரூ.10.33 லட்சம் பறித்த நைஜீரிய இளைஞரை உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த இளம்பெண், திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அமெரிக்காவில் மருத்துவராக இருப்பதாக கூறி, அலெக்ஸ் என்ற இளைஞர் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரது பேச்சால் ஈர்க்கப்பட்ட பெண், அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
இந்த நிலையில், காதல் பரிசாக விலை உயர்ந்த பரிசு பொருட்களை கூரியர் மூலம் அனுப்பி வைப்பதாக கூறிய இளைஞர், அந்த புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். சிறிது நேரத்தில், கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக ஒரு நபர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டார். “விலை உயர்ந்த பொருட்கள் உங்கள் பெயருக்கு வந்துள்ளது. அதை பெற, முன்பணம் கட்ட வேண்டும்” என்று கூறி, ஒரு வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்துள்ளார். பெண்ணும் அந்த கணக்குக்கு பணம் அனுப்பியுள்ளார்.
மறுநாள், சுங்கத் துறை அதிகாரி என ஒருவர் பேசியுள்ளார். “பல கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் உங்கள் பெயருக்கு சட்ட விரோதமாக வந்துள்ளன. அதற்கு நீங்கள் வரி செலுத்தாவிட்டால், பார்சலை அனுப்பிய நபர் சிறை செல்ல நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்.
பெண்ணும் பயந்துபோய் பணம் செலுத்தியுள்ளார். அடுத்து, பண பரிவர்த்தனையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வருமான வரித் துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள் என வெவ்வேறு நபர்கள் பேசி, அவரிடம் இருந்து மொத்தமாக ரூ.10.33 லட்சத்தை பறித்துள்ளனர்.
கடைசி வரை பரிசுப் பொருள் வராததால் சந்தேகமடைந்த பெண், சம்பந்தப்பட்ட இளைஞரை தொடர்பு கொண்டபோது, அவரது போன் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண், இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
காவல் ஆய்வாளர் வினோத்குமார் தலைமையிலான சைபர் கிரைம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். மோசடி அழைப்புகள் அனைத்தும் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது.
நொய்டா விரைந்த தனிப்படையினர், அங்கு பதுங்கியிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த சுக்வுமேகா இகெடினோபி (33) என்பவரை கைது செய்தனர். இவர்தான் அமெரிக்க மருத்துவர் அலெக்ஸ் என்ற பெயரில் முதன்முதலில் இளம்பெண்ணை ஏமாற்றியவர். அவரிடம் இருந்து 8 செல்போன், 1 லேப்டாப், 3 ஏடிஎம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.
தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் பொதுமக்கள் ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.