

கோவை: கோவை அருகே பள்ளி வளாகத்தில் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்தார்.
சிறுவனின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.50 ஆயிரம், மாவட்ட திமுக சார்பில் ரூ.1 லட்சம், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சம் என ரூ.2.50 லட்சத்துக்கான காசோலைகளை பெற்றோரிடம் வழங்கினார். கோவை வேடப்பட்டி சாலை நாகராஜபுரத்தில் உள்ள அன்னை சத்தியா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். கூலித் தொழிலாளி. இவரது மகன் குகன் ராஜ் (6) தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை விளையாடச் செல்வதாக பெற்றோரிடம் கூறிச்சென்ற குகன்ராஜ், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் பெற்றோர் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. நேற்றிரவு வீட்டின் அருகே அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்தில் தேடியபோது, நிலத்தடி தண்ணீர் தொட்டிக்குள் சிறுவன் மிதந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
சிறுவனை மீட்டு, வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் தூக்கிச் சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள், தொட்டியை முறையாக மூடாததால்தான் சிறுவன் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்ததாகக் கூறி சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் அங்கு சென்று தொழிலாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தொண்டா முத்தூர் காவல் துறையினர் அங்கு வந்து விசாரித்தனர். சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தினர். சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அசாம் மாநில தொழிலாளர்கள் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த சிறுவனின் பெற்றோரை நேற்று வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.50 ஆயிரம், மாவட்ட திமுக சார்பில் ரூ.1 லட்சம், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சம் என ரூ.2.50 லட்சத்துக்கான காசோலைகளை பெற்றோரிடம் அமைச்சர் வழங்கினார்.