

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் ரூ.10 லட்சம் திருடப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கோட்டூர்புரம், சர்தார் பட்டேல் சாலை பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலய ஊழியர்கள் கடந்த 2-ம் தேதி காலை வழக்கம் போல் தேவாலயத்தின் கதவை திறக்க முயன்றனர். அப்போது கதவு ஏற்கெனவே திறந்திருப்பதை பார்த்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.10 லட்சம் காணிக்கை பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தேவாலயத்தில் ஏற்கெனவே வேலையை விட்டு நீக்கப்பட்ட தரமணியைச் சேர்ந்த சகேயு (53) உதவியுடன், அவரது கூட்டாளிகள் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த அராவா சதா சிவா (51), அதே பகுதியைச் சேர்ந்த திருமுரு தனுஷ்(19), போக்குர் கணேஷ் (22) ஆகியோர் திருடியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் 4 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3,40,000 பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், சகேயு அந்த தேவாலயத்தில் பணி புரிந்த போது நடவடிக்கை சரியில்லாததால் 3 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நீக்கப்பட்டதும், இதனால் தனது கூட்டாளிகள் மூலம் திருட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.