கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

உயர் நீதிமன்றம், மதுரை.
உயர் நீதிமன்றம், மதுரை.
Updated on
1 min read

மதுரை: அம்பை காவல் நிலையத்தில் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அருண்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'அம்பாசமுத்திரம் போலீஸார் விசாரணைக்காக என்னை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து என்னை போலீஸார் கடுமையாக தாக்கினர். என் நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. என்னைப் போல் பலரின் பற்களை போலீஸார் உடைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலிஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி அமுதா மற்றும் நெல்லை மாவட்ட உதவி ஆட்சியர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், எனக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கவுவும், ஐஏஎஸ் அதிகாரி மற்றும் உதவி ஆட்சியரின் விசாரணை அறிக்கை வழங்கவும் உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டி.நாகார்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ''இந்த வழக்கில் விசாரணை முழுமையாக நிறைவடைந்துள்ளது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பு விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மனுதாரருக்கு விசாரணை அறிக்கை வழங்கப்படும். மனுதாரர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இதனால் அவருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இழப்பீடு வழங்க முடியாது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்டு, ''விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு வன்கொடுமை சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க முடியாது. மனு முடித்து வைக்கப்படுகிறது'' என நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in