Published : 06 Oct 2023 09:52 AM
Last Updated : 06 Oct 2023 09:52 AM

நெல்லை இளம்பெண் கொலையில் சிறுவன் கைது விவகாரம்: வீடியோ வெளியிட்ட பெண் ஏட்டு பணியிடை நீக்கம்

திருப்பணி கரிசல்குளத்தில் 4-வது நாளாக கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று 4-வது நாளாக வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து மாலையில் சடலத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டது தொடர்பான வீடியோவை வெளியிட்டதாக மூன்றடைப்பு பெண் தலைமை காவலர் ஜெபமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி அருகே திருப்பணிகரிசல் குளத்தை சேர்ந்த சந்தியா (18) என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன் டவுனில் அவர் பணி செய்யும் பேன்சி ஸ்டோர் கடையின் கிட்டங்கியில் கொலை செய்யப்பட்டார்.

காதல் விவகாரத்தில் இந்த கொலை நடைபெற்றது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர்.

உறவினர்கள் போராட்டம்: இந்நிலையில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி திருப்பணிகரிசல்குளம் ஊர் பொதுமக்களும், சந்தியாவின் உறவினர்களும் திருப்பணி கரிசல்குளம் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 4-வது நாளாக நேற்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சந்தியாவின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதைதொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு நேற்று மாலையில் சென்று உடலை பெற்றுக்கொண்டனர்.

பெண் ஏட்டு பணியிடை நீக்கம்: சந்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முனைஞ்சிப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்வதற்கு முன் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. சந்தியாவை கொலை செய்த அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். போலீஸார் அவரை கைது செய்யும்போது அவரது கழுத்தில் காயம் இருந்தது.

அது குறித்து விசாரித்தபோது, தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் அச்சிறுவனுடன் போலீஸார் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. சமூக வலைதளங்களில் இவற்றை வெளியிட்டது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

சிறுவனை கைது செய்த போது அங்கிருந்த மூன்றடைப்பு பெண் தலைமை காவலர் ஜெபமணி என்பவர் அந்த வீடியோவை பரப்பியது விசாரணையில் தெரியவந்தது. கொலை வழக்கு விசாரணை தொடர்பான காட்சிகளை பொது வெளியில் பரப்பியது, வழக்குகளில் கைதாகும் சிறுவர்களின் புகைப்படங்களை பொது வெளியில் வெளியிடக் கூடாது என்ற விதிமுறையை மீறியது ஆகிய காரணங்களுக்காக அவரை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x