Published : 06 Oct 2023 05:45 AM
Last Updated : 06 Oct 2023 05:45 AM

தமிழகத்தில் முதல்முறையாக ‘ரியல் எஸ்டேட்' மோசடி வழக்கில் 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக தனித்தனி மூட்டைகளில் கோவை டான்பிட் நீதிமன்றத்துக்கு நேற்று கொண்டுவரப்பட்டிருந்த குற்றப்பத்திரிகை நகல்கள். படம்: க.சக்திவேல்

கோவை: சேலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட்அதிபர் சிவக்குமார், பல்வேறு நிறுவனங்கள் ெபயரில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக சேலம் மத்திய குற்றப்பிரிவில் 2017-ல் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு, சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. விசாரணை மேற்கொண்ட போலீஸார், சிவக்குமார் உட்பட 29 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போலீஸார் 2019-ம் ஆண்டு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், மொத்தம் 1,686 பேரிடம் ரூ.74.16 கோடி மோசடி செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் சுமார் 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்களை வழங்க வேண்டியிருந்ததால், அதற்கு போதிய நிதி ஒதுக்குமாறு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார், டிஜிபி-க்கு கடிதம் அனுப்பினர். இதையடுத்து, அரசுசார்பில் நகல்கள் வழங்க ரூ.14லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, நகல்கள் எடுக்கடெண்டர் விடப்பட்டு, சுமார் 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் எடுக்கப்பட்டு, வேன்கள் மூலம் சேலத்தில் இருந்துகோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள டான்பிட் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி முன்னிலையில் குற்றப்பத்திரிகை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தவிர, மற்றவர்கள் ஆஜராகி, நகல்களை தனித்தனியே மூட்டைகளில் பெற்றுக்கொண்டனர்.

தமிழகத்தில் ஒரு வழக்கில் இவ்வளவு பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும் என்று போலீஸார் தெரிவித்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் க.முத்துவிஜயன் ஆஜரானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x