

ஆண்டிபட்டி: கடனை செலுத்தவில்லை என்று ஒருவரின் வீட்டுச் சுவரில் நிதி நிறுவன ஊழியர்கள் எழுதிச் சென்றது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் க.விலக்கு அருகே உள்ள அன்னை இந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் பிரபு (39). சமையலராக பணியாற்றி வருகிறார். இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் வீட்டு அடமானக் கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில், கடனை திருப்பிச் செலுத்திவிட்டதாகக் கூறி வீட்டுக்கான ஆவணத்தை தருமாறு கேட்டுள்ளார். அப்போது, மேலும் ரூ.1.50 லட்சம் கடன் பாக்கி உள்ளதாக நிதி நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் கூறிய தொகையை செலுத்தாததால் பிரபுவின் இரு சக்கர வாகனத்தை நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து பிரபு க.விலக்கு போலீஸில் புகார் கொடுத்தார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு வந்த நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டுக் கடன் செலுத்தவில்லை என்று பிரபுவின் வீட்டுச் சுவரில் எழுதிவிட்டுச் சென்றனர். இது குறித்து க.விலக்கு காவல் நிலையத்தில் பிரபு புகார் அளித்துள்ளார்.